கரோனாவுக்கு ஒரே நாளில் 617 பலி: ராணுவத்தை அழைத்த இத்தாலி

கரோனாவுக்கு ஒரே நாளில் 617 பலி: ராணுவத்தை அழைத்த இத்தாலி
Updated on
1 min read

இத்தாலியில் கோவிட் காய்ச்சலுக்கு 617 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து முழு அடைப்பைக் கட்டாயப்படுத்த ராணுவத்திற்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 637 பேர் பலியாகினர். ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,032 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சல் முதலில் பரவிய லோம்பார்டி மாகாணத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 காய்ச்சல் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சீன மருத்துவ நிபுணர்கள் இத்தாலி மருத்துவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தாலியில் ழுழு அடைப்பை மக்கள் கடைப்பிடிக்க ராணுவத்திற்கு இத்தாலி அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லோம்பார்டி மாகாணத்தில் விரைவில் ராணுவம் இறக்கப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in