

கரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் நெருக்கடி நிலை மூன்று வாரங்களில் குறையும் என்று அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை ஈரானில் 1,093 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 21,571 பேர் கோவிட் காய்ச்சலால் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரானில் நெருக்கடி நிலை விரைவில் சீரடையும் என்று அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “ஈரானில் இந்த நெருக்கடி நிலை மூன்று வாரங்களில் குறையும். பொருளாதார உற்பத்தியை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
தற்போதைய தகவலின்படி உலகம் முழுவதும் 2,76,474 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,586 பேர் பலியாகியுள்ளனர்.