

பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோவிட் காய்ச்சலுக்கு மட்டும் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிட்-19 காய்ச்சல் காரணமாக பாகிஸ்தான் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவப் பிரதிநிதிகள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும் என்றும் அதனை வழங்கவில்லை என்றால் மார்ச் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறும்போது, “தற்போதைய சூழலில் பணிபுரிவது என்பது முடியாத ஒன்று. எங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கவில்லை என்றால் மார்ச் 24 ஆம் தேதி முதல் பணிகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறோம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிவது என்பது தற்கொலைக்குச் சமம். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் உள்ள மருத்துவர்களுக்கு சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும்” என்றார்.