

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, அவ்வைரஸால் சீன மருத்துவர் லி வென்லியாங் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.
ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன போலீஸார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.
லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது. இதில் லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது.
தற்போது உலகம் முழுவதும் 2,76,179 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,406 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், அவ்வைரஸ் குறித்த முதலில் எச்சரிக்கை விடுத்து, உயிரைப் பறிகொடுத்த மருத்துவர் லி வென்லியாங்கின் குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், லி வென்லியாங்கின் குடும்பத்திற்கு நிதி இழப்பீட்டையும் சீன அரசு வழங்கியுள்ளது.