கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது இத்தாலி

கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது இத்தாலி
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகமாகியுள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் - 19 காய்ச்சலுக்கு 427 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கோவிட் 19 காய்ச்சல் பரவத் தொடங்கிய சீனாவை விட அதிகம். சீனாவில் கரோனா வைரஸால் 3,248 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,000 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,000க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 4,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in