Published : 20 Mar 2020 10:44 AM
Last Updated : 20 Mar 2020 10:44 AM

கைகழுவுதலின் நன்மைகளை உலகுக்கு உணர்த்திய மருத்துவரை கவுரவித்து கூகுள் டூடுல்: கரோனா தொற்று காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது

கைகளைக் கழுவுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை உலகுக்கு முதன்முதலில் உணர்த்திய மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கை கழுவுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை விளக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ கொண்ட கூகுள் டூடுல் முக்கியத்துவம் பெறுகிறது.

யார் இந்த இக்னேஸ் செமல்வெய்ஸ்?

மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் ஹங்கேரி நாட்டில் 1818-ல் பிறந்தவர். வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1847-ல் இவர் வியன்னா பொது மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராக நியமிகப்பட்டார்.

அப்போது அவர், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னதாகக் கட்டாயமாகக் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் சைல்ட் பெட் ஃபீவர் (childbed fever) என்றொரு காய்ச்சல் காரணமாக பிறப்பின்போது நிகழும் குழந்தை இறப்பு விகிதம் ஐரோப்பா முழுவதுமே அதிகமாக இருந்தது. அதைத் தவிர்க்க பிரசவத்துக்கு முன்னதாக கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் குறித்து மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மருத்துவர்கள் பேறுகால சிகிச்சையின்போது கைகளைக் கழுவிவிட்டு பிரசவம் பார்த்தாலோ அறுவைசிகிச்சை மேற்கொண்டாலோ சிசுவுக்கு சைல்ட் பெட் ஃபீவர் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் இறப்பது வெகுவாகக் குறைந்தது.

இது மருத்துவ உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது. 1855-ல், பெஸ்ட் பல்கலைக்கழகத்தின் மகப்பேறு பிரிவு பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். 1861-ல் தனது கண்டுபிடிப்புகள் தொடர்பாக The Etiology, Concept, and Prophylaxis of Childbed Fever என்ற மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தார்.

உலகுக்கே கை கழுவுதலின் மருத்துவ நன்மைகளை உணர்த்திய மருத்துவர் இக்னேஸ் 1865-ல் மனநலம் பாதிக்கப்பட்டார். அந்த வேளையில் அவருக்கு வலது கையில் ஒரு காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் உயிர் நீத்தார்.

பின் நாளில் அவரது பரிந்துரைகள், ஆராய்ச்சிகள் தொகுக்கப்பட்டு "germ theory of disease" என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டது.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதல் பரிந்துரை கைகளை முறையாகக் கழுவுதலாகவே இருக்கிறது.

இதனை உணர்த்தும் வகையில் இன்றைய கூகுள் டூடுல் வீடியோவில் கை கழுவுதல் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இக்னேஸ் செமல்வெய்ஸையும் நினைவுகூர்வதோடு கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தலை கரோனா காலம் தாண்டியும் கடைபிடிப்போம்.

வீடியோவுக்கான லின்க்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x