

உலகில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3,612. இதில் குணமடைந்தோர் 82 ஆயிரத்து 866 மற்றும் உயிரிழந்தோர் 8,229 போக, இன்னும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேர்வைரஸ் பாதிப்பால் உலகம் முழுக்கசிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நோயை கட்டுப்படுத்த உலகமே போராடி வரும் நிலையில், பிரிட்டிஷ் அரசின் ‘குழு நோய் எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி)’ கொள்கை உலகம்முழுக்க பெரும் விமர்சனத்தைசந்தித்துள்ளது. அதாவது, இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்காமல், அவர்கள் உடலில் தாமாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக அனுமதிப்பதுதான் இக்கொள்கை. மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாக அனுமதிப்பதன் மூலம், நோய் பரவலைத் தடுக்க முடியும் என்பது பிரிட்டிஷ் அரசின் கொள்கை. அங்கு தற்போது 1,950 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது சாத்தியம்தான் என்று அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், அத்தகைய நிலை உருவாக 60 சதவீத மக்களுக்கு அந்த நோய் தாக்கம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் சாத்தியம் என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குள் ஏற்படும் உயிரிழப்பு பல ஆயிரமாக அதிகரிக்கும். இது, அபாயகரமான கொள்கை என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இந்தக் கொள்கையை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம்அனுப்பியுள்ளனர். ‘ஹெர்டு இம்யூனிட்டி’ முறையை எட்டுவதற்குள் பல ஆயிரம் உயிர்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் இக்கொள்கையை கைவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மேட் ஹான்காக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹெர்டு இம்யூனிட்டி’ முறை என்பது எங்களது சுகாதாரக் கொள்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை’ என்று மறுத்துள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த முறையை அந்த அரசு பின்பற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கால்நடைகளுக்கு இந்த முறை உலகம் முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. நோயை வரவழைத்து அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக அனுமதிக்கும்போது, நோயால் பாதிக்கப்படாத கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
இதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால்,இந்த நடைமுறையை மனிதர்களுக்கு பயன்படுத்த எடுத்துள்ள முயற்சி உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளது.