Published : 20 Mar 2020 07:42 AM
Last Updated : 20 Mar 2020 07:42 AM

கரோனா வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள அமெரிக்காவில் ரூ.7,88,345 கோடி நிதி ஒதுக்கீடு

கரோனா வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள அமெரிக்காவில் ரூ.7 லட்சத்து 88,345 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினை சுமார் 18 மாதங்களுக்கு நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள ரூ.7,88,345 கோடியை அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒதுக்கியுள்ளார். இதற்கான மசோதாவில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிதியின் மூலம் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.

அடுத்த கட்டமாக ரூ.97 லட்சத்து 59,100 கோடி மதிப்பிலான சிறப்பு நிதியத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா வரையறுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் மாதம்தலா ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரிட்டனில் மாத ஊதியம்

பிரிட்டனிலும் கரோனா வைரஸ்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் 2,626 பேர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள னர். 104 பேர் உயிரிழந்துள்ளனர். லண்டன் நகரம் சீல் வைக்கப்பட் டுள்ளது. சுரங்க ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருந்து, மளிகை கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மளிகை, உணவுப் பொருட்கள் வீசப்படுகின்றன. பிரிட்டன் குடிமகன்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசே வழங்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இத்தாலியில் 35,713 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் நேற்று ஒரேநாளில் 475 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 2,978 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

ஈரானில் 17,361 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அந்தநாட்டில் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 13,716பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 598 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 2,14,352 பேர் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 9,006 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

97 இந்தியர்கள் தவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ், மலேசியாவை சேர்ந்த 97 இந்தியர்கள் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

சிங்கப்பூர் அரசின் கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர். அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவித் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x