

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 6,522 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் அதிகபட்சமாக 1,707 பேர் கோவிட்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
பெரும்பாலும் 60, 70, 80 வயதைக் கடந்தவர்களே கரோனா வைரஸால் உயிரிழந்ததாகவும், மேலும் அமெரிக்கவில் கோவிட் காய்ச்சல் பரவுதல் அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.