பாகிஸ்தானில் கல்லால் அடித்து கர்ப்பிணி படுகொலை

பாகிஸ்தானில் கல்லால் அடித்து கர்ப்பிணி படுகொலை
Updated on
1 min read

பாகிஸ்தானில், தங்களின் விருப்பத்துக்கு எதிராக வேறொருவரைக் காதலித்துத் திருமணம் செய்த மகளை, அவர் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரின் பெற்றோர் கல்லால் அடித்துக் கொலை செய்தனர். நீதிமன்ற வாயிலில் இக் கொடூரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நானகானா சாஹிப் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஸானா பர்வீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் பர்ஸானாவின் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. இதையடுத்து, பர்ஸானாவைக் கடத்திச் சென்றுவிட்டதாக அவரின் குடும்பத்தினர் முகமது இக்பால் மீது காவல்துறையில் புகார் செய்தனர்.

கணவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதற்காக பர்ஸானா நீதிமன்றம் வந்தார். அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த பர்ஸானாவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் செல்ல அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முயன்றனர். அதற்காக வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர். ஆனால், பர்ஸானா வராததால், அவரையும் இக்பாலையும் தடி மற்றும் செங்கற்களால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கினர்.

பர்ஸானாவின் பெற்றோர், 2 சகோதரர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் சரமாரியாகத் தாக்கியதில் பர்ஸானா தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பர்ஸானா 3 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.இக்பால் காயங்களுடன் உயிர் தப்பினார். அப்பகுதியிலிருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றுவதற்குள் இச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பர்ஸானாவின் தந்தை முகமது அஸீமைக் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கவுரவக் கொலை

பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் மிகச் சாதரணமாக அரங்கேறி வருகின்றன. தங்களின் விருப்பத்துக்கு மாறாக காதலித்துத் திருமணம் செய்பவர்களை பெற்றோர்கள் கொலை செய்து விடுகின்றனர். பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தகவலின்படி கடந்த ஆண்டு மட்டும் 900 பேர் கவுரவக் கொலை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in