

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் தற்போது இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனி நாட்டை ஒட்டிய தனது எல்லைகளை பிரான்ஸ் அரசு மூடியுள்ளது. மேலும் பிரான்ஸில் உள்ள பள்ளிகள், மது விடுதிகள், ஓட்டல்களை மூட பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் ஆஸ்திரியாவிலும் 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காய்ச்சலுக்கு பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறும்போது, “பிரான்ஸில் அடுத்த 15 நாட்களுக்குக் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய தீவிர நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்தும் ஓட்டல்கள், விடுதிகள், மதுக் கடைகள் ஆகியவற்றில் மக்கள் ஒன்றாகக் கூடி வருவதையும் நாங்கள் கண்டு வருகிறோம். இம்மாதிரியான நடவடிக்கைகள் பிறரையும் ஆபத்தில் தள்ளுகிறது.
நாம் தற்போது போரில் இருக்கிறோம். அரசாங்கத்தின் முழு கவனமும் அந்தத் தொற்று நோயை எதிர்ப்பதில் உள்ளது” என்றார்.
மேலும், கரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியைச் சந்திக்கும் நிறுவனங்களுக்கு வரி, மின் கட்டணம் ஆகியவற்றை பிரான்ஸ் அரசு ரத்து செய்துள்ளது.