சிரியாவின் போர் மற்றொரு அவமானகரமான எல்லையைத் தொட்டுள்ளது: யுனிசெஃப் வருத்தம்

சிரியாவின் போர் மற்றொரு அவமானகரமான எல்லையைத் தொட்டுள்ளது: யுனிசெஃப் வருத்தம்
Updated on
1 min read

சிரியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் சூழலில் பிறந்துள்ளனர் என்று யுனிசெஃப் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் கூறும்போது, “சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் நடக்கும் போர் மற்றொரு அவமானகரமான எல்லையைத் தொட்டுள்ளது. சிரியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் சூழலில் பிறந்துள்ளனர். லட்சக்கணக்கான குழந்தைகள் வன்முறை, போர், மரணங்களுக்கு இடையே அடுத்த தசாப்தத்திற்குள் நுழைகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் போரில் 9,000க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர்.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரிய படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in