

வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸை சார்க் நாடு கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும், இதுதொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் ஆலோசனை நடத்தலாம் என்றும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பை பாகிஸ் தான் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தைத் தடுக்க இணைந்து பணியாற்றத் தயார் என்று அந்நாடு நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
கோவிட்-19 வைரஸை பிராந் திய, உலக அளவில் இணைந்து எதிர்கொள்வது என்பது அவசிய மாக உள்ளது. இந்திய பிரதமர் மோடி, சார்க் நாடுகள் இணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத் திருந்தார். இந்த விஷயத்தில் தனது அண்டை நாடுகளுக்கு உதவிசெய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது.
வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவி யாளருக்கு (சுகாதாரம்) தகவல் தெரிவித்துவிட்டோம். வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் மாநாட் டில் பங்கேற்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானில் கோவிட்-19 வைரஸை எதிர்கொள் வது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று அவசரக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இன்று மாலை சார்க் மாநாடு நடைபெறவுள்ளது குறிப் பிடத்தக்கது. - பிடிஐ