Published : 14 Mar 2020 12:19 PM
Last Updated : 14 Mar 2020 12:19 PM

கரோனா வைரஸ்; ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா?- சர்ச்சையில் சிக்கிய அமேசான்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நியூயார்க்

கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களின் வேலையிழப்பை ஈடுகட்ட மற்ற ஊழியர்கள் விடுமுறை காலத்தை தானமாக தர வேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் துணை நிறுவனங்களில் ஒன்று ‘ஹோல் புட்ஸ்’. இந்த நிறுவனம் மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்கிறது.

இதன் தலைமை செயல் அதிகாரி ஜான் மெக்ரே ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் ‘‘கரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் சில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிறுவனத்திற்கு ஏற்படும் வேலையிழப்பை சக ஊழியர்கள் தங்கள் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறையை தானமாக அளித்து ஈடு செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாண்டர்ஸ் பென்னி கூறியதாவது:

அமேசான் நிறுவனம் செய்து வரும் பல கோடி ரூபாய் வர்த்தகத்திற்கு அரசு வரி விலக்கு அளித்து ஊக்குவித்து வருகிறது. ஆனால் அந்த நிறுவனம் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்களின் வேலையிழைப்பை ஈடுகட்ட அவர்களது ஓய்வு நேரத்தை சம்பளம் இல்லாமல் ஓசிக்கு கேட்கிறது.

இது நியாயமா. இது முழுக்க முழுக்க அந்த நிறுவனத்தின் சுயநலம் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே பெரும் பணக்காரராக இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு பலரும் தனது எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

‘‘தனது லாபம் மற்றும் நிறுவன வளம் சார்ந்த நிதியை பெசோஸ் கரோனா வைரஸ் பாதித்த ஊழியர்களின் வேலையிழப்புக்கு பயன்படுத்தாமல், தினசரி சம்ளபத்திற்காக மட்டும் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு நேரத்தை சுரண்டும் போக்கு கண்டிக்கதக்கது’’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x