Published : 14 Mar 2020 09:07 AM
Last Updated : 14 Mar 2020 09:07 AM

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக முன்னாள் நீதிபதி கேத்ரினா பதவியேற்பு

புதிய அதிபர் கேத்ரினா

ஏதென்ஸ்

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேத்ரினா சாகெல்லரோபவ்லு நேற்று பதவியேற்றார்.

கிரீஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இதில் கட்சி சார்பற்ற வேட்பாளராக கேத்ரினாவின் பெயரை பிரதமர் கிரியாகோஸ் மிட்சோதாகிஸ் அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கேத்ரினாவை ஆதரித்தன. இந்நிலையில் அவரது வெற்றிக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 261 வாக்குகள் (எம்.பி.க்களின் ஆதரவை) பெற்று கேத்ரினா வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக 33 வாக்குகள் பதிவாயின. 6 எம்.பி.க்கள் தேர்தலில் பங்கேற்வில்லை.

இந்நிலையில் இந்த தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு பிறகு கிரீஸ் புதிய அதிபராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேத்ரினா நேற்று பதவியேற்றார்.

கிரீஸ் நாட்டில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளதால் பதவியேற்பு விழாவில் எம்.பி.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர். விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கிரீஸ் நாட்டில் கோவிட்-19 காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும் 117 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் விழாக்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிரீஸ் நாட்டில் அரசியல் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்றது. இதில் 18 அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அதிபர் பதவிக்கு பெண் ஒருவரை வேட்பாளராக பிரதமர் அறிவித்தார். கிரீஸ் நாட்டில் அதிபர் பதவி பெரும்பாலும் சம்பிரதாய பதவியாக உள்ளது. என்றாலும் பெண் ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x