

சீனாவில் தொடங்கி தற்போது கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு கண்டங்களுக்குப் பரவி வரும் மிகப்பெரிய வைரஸ் தொற்றான கரோனா அல்லது கோவிட்-19 ஜப்பானில் மோசமாகப் பரவத் தொடங்கினால் என்ன செய்வது என்பதற்காக பிரதமர் ஷின்சோ அபேவுக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
கரோனா தொற்று மோசமானால் இந்தச் சட்டத்தை பிரதமர் அமல்படுத்தி அவசரநிலைப் பிரகடனம் செய்ய முடியும்.
ஆனால் இது ஒரு சர்ச்சைக்குரிய சட்டமாகும் அங்கு. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் சீனா போல்தான் சிவில் உரிமைகள் பறிபோகும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களை கட்டாயமாக மூட வேண்டும், தனியார் சொத்துக்களை பறிமுதல் செய்து கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும். மருந்து ஏற்றுமதிகளை நிறுத்தி வைக்கும்.
பெரிய அளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும். மக்களுக்கு ஆங்காங்கே சீனா போல் கடும் சோதனைகளை ஏற்படுத்தும் சட்டமாகும் இது, ஆனால் நோய்த்தடுப்புக்கு வேறு வழியில்லை என்கிறது ஜப்பான் நாடாளுமன்ற வட்டாரங்கள்.
கரோனாவின் சமீபத்திய நிலை மற்றும் அது பரவும் வேகம், தொற்றின் எதிர்காலத் தாக்கம் ஆகியவற்றை நிபுணர்கள் குழு ஆராய்ந்து பிரதமரிடம் தகவலறிக்கை தாக்கல் செய்த பிறகு எமர்ஜென்சி பிரகடனம் செய்ய வாய்ப்புள்ளது.
ஜப்பானில் இதுவரை 675 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 697 பேர் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருக்கின்றனர்.