

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, ரோம் நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டன
இத்தாலி அரசு அறிவித்தபடி ஏப்ரல் 3-ம் தேதிக்குப்பின் அனைத்து தேவாலயங்களும் திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலய பிரார்த்தனைக் கூட்டத்தில் கத்தோலிக்க மதத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு சிறிது காலத்துக்குத் தளர்த்தப்படுகிறது என்று கார்டினல் ஏஞ்சலோ டி டொனட்டிஸ் தெரிவித்தார்
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான உயிரிழப்பை இத்தாலி, ஈரான் நாடுகள் சந்தித்துள்ளன.
கரோனா வைரஸுக்கு இதுவரை இத்தாலியில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர், 15 ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக இறப்பு விகிதம் என்பது இத்தாலியில் 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நாடாக அரங்குகள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 3-ம் தேதிவரை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல் திருமணங்களை நடத்தவும், இறுதி ஊர்வலம் நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தேவாலயங்களில் மக்கள் பிரார்த்தனையின் போது இடைவெளிவிட்டு அமர வேண்டும் என்று முதலில் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது இத்தாலியில் பலி ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து விட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோம் நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கார்டினல் ஏஞ்சலோ டி டொனட்டிஸ் விடுத்துள்ள அறிவிப்பில், " கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து, ரோம் நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் ஏப்ரல் 3-ம் தேதிவரை மூடப்படுகிறது. இத்தாலி அரசின் அடுத்த அறிவிப்புக்குப்பின் தேவாலயம் திறக்கப்படும். அதுவரை கத்தோலிக்க மக்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க விலக்கு அளிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் பேஸ்லிகா தேவாலயம், அருங்காட்சியகம் அனைத்தும் மூடப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் திருமணம், இறப்பு இறுதி ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.