Published : 13 Mar 2020 10:05 AM
Last Updated : 13 Mar 2020 10:05 AM

மருந்தகங்கள், மளிகை கடைகளை தவிர்த்து இத்தாலியில் அனைத்து கடைகளும் மூடல்

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் இத்தாலியின் மிலன் நகர பிரதான சாலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.படம்: ஏஎப்பி

ரோம்

இத்தாலியில் மருந்தகங்கள், மளிகை கடைகளை தவிர்த்து இதரஅனைத்து கடைகளையும் மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில்இதுவரை 12,462 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 827 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்துவிளையாட்டு போட்டிகள், ஆடைஅலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் இத்தாலி பிரதமர் கிசாபே கான்டி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த இத்தாலி முழுவதும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள், சலூன்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்படும். மருந்தகங்கள், மளிகை கடைகள் மட்டுமே செயல்படும். மளிகை பொருட்கள், மருந்துகளை வாங்க பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டாம். போதுமான மளிகை பொருட்கள், மருந்துகள் இருப்பில் உள்ளன. இந்த கடைகள் 24 மணி நேரமும் செயல்படும். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துகிறோம். நாட்டின் நலன் கருதி இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த இத்தாலி மிகப்பெரிய தியாகங்களை செய்து வருகிறது. நாட்டையும் உலகத்தையும் காப்பாற்ற இத்தாலி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை டபிள்யூ. எச்.ஓ. பாராட்டுகிறது. இத்தாலியின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் 987 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறியதாவது:

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுடனான அனைத்து வகையான போக்குவரத்தும் ஒருமாதத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த தடையில் இருந்து பிரிட்டன், அயர்லாந்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் நேற்று ஒரே நாளில் 1,075 பேருக்கு கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் தொற்றியது. இதன்மூலம்அந்த நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,075 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x