

வன்முறை நோக்கம், பாலியல் அத்துமீறல், சமூக அறநெறியை சீர்குலைக்கும் அம்சங்கள் கொண்ட 120 பாடல்களை இணையத்திலிருந்து முற்றிலுமாக நீக்கி தடை விதித்துள்ளது சீனா.
தடை விதிக்கப்பட்டிருக்கும் பாடல்களை தனிநபர், இயக்கம் அல்லது எந்த குழுக்களும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவை மீறினால் தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் சீனா கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன கலாச்சார அமைச்சகம் தரப்பில் கூறும்போது, "வன்முறை நோக்கம், பாலியல் அத்துமீறல் நடவடிக்கைகள், சமூக அறநெறியை சீர்குலைக்கும் அம்சங்கள் கொண்ட தடை செய்யப்பட்ட பாடல்களை எவரும் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. சுய தணிக்கைக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய பாடல்கள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டியது அவசியம். விதிமுறைகளுக்கு உட்பட்டு இனி பாடல்கள் இயற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆல் மஸ்ட் டை', 'நோ மணி நோ ஃப்ரெண்ட்', 'சூசைட் டயரி', 'டோன்ட் வான்ட் டு கோ டு ஸ்கூல்' உள்ளிட்ட பாடல்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சீனாவில் பெரிய அளவிலான இணையத் தணிக்கை நடைமுறையில் உள்ளது. ஆபாச வலைதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், மேற்கத்திய செய்தி ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ப்ளூம்பெர்க் உள்ளிட்ட நிறுவனங்களின் வலைதளங்களும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.