Published : 11 Mar 2020 07:24 AM
Last Updated : 11 Mar 2020 07:24 AM

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார்?

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. குடியரசு கட்சியில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக கட்சி சார்பில் கடந்த ஆண்டு 25 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிலர் மட்டுமே களத்தில் நிலைத்து நின்றனர். கடந்த 3-ம் தேதி 14 மாகாணங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தெளிவான முடிவுகள் கிடைத்துள்ளன.

இதன்படி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென், வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் இடையே மட்டும் பலப்பரீட்சை நடைபெறுகிறது. கடந்த 3-ம் தேதி தேர்தல் முடிவுகளில் ஜோ பிடென் 10 மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளார். பெர்னி சாண்டர்ஸுக்கு கலிபோர்னியாவும், வெர்மாண்டும் கைகொடுத்துள்ளன.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான எலிசபெத் வாரன், தனது சொந்த மாகாணமான மசசூசெட்ஸில் தோல்வியைத் தழுவியுள்ளார். அந்த கட்சியின் கோடீஸ்வர வேட்பாளரான மைக்கேல் புளூம்பர்க் தனது சொந்த பணத்தில் ரூ.3,707 கோடியை செலவு செய்துள்ள நிலையில் போட்டியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஜோ பிடெனுக்கு அவர் தனது முழுஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதேபோல அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிய சவுத் பெண்ட் நகர முன்னாள் மேயர் பீட்டி குட்டிஜிக் , செனட்டர் ஏமி குளோபுஜார் ஆகியோரும் ஜோ பிடெனை பகிரங்கமாக ஆதரித்துள்ளனர். மற்றொரு போட்டியாளர் எலிசபெத் வாரன் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றால் பீட்டி குட்டிஜிக் , ஏமி குளோபுஜாரில் ஒருவர் துணை அதிபராக தேர்வு செய்யப்படலாம்.

ஒருவேளை அவர்கள் துணை அதிபராக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் வெள்ளை மாளிகையுடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருப்பார்கள். கடந்த 3-ம் தேதி தேர்தலுக்கு முன்பாகவே இருவரும் தங்கள் ஆதரவை ஜோ பிடெனுக்கு தெரிவித்துவிட்டனர். இது அவருக்கு சாதகமாக அமைந்தது.

அடுத்த கட்டமாக ஐடஹோ, மிச்சிகன், மிஸிசிப்பி, மிசோரி, நார்த் டகோடா, வாஷிங்டன் ஆகிய 6 மாகாணங்களில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிக்சிகன் மாகாணத்தில் மட்டும் 125 பிரதிநிதிகள் வாக்குகள் உள்ளன. இந்த மாகாணத்தை தங்கள் வசமாக்க ஜோ பிடெனும் பெர்னி சாண்டர்ஸும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

மிச்சிகன் மாகாணத்தில் பெரிய நகரமான டெட்ராய்ட், தொழில் உற்பத்தி மையமாகும். அங்கு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதுவரை நடந்த தேர்தல்களில் ஜோ பிடெனுக்கு ஆதரவாகவே அவர்கள் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதில் மிச்சிகன் மாகாணம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கடந்த 2016 அதிபர் தேர்தலின்போது இந்த மாகாணத்தில் ஹிலாரி கிளிண்டனை, பெர்னி சாண்டர்ஸ் தோற்கடித்தார். இதேபோல இந்த முறை பெர்னி சாண்டர்ஸுக்கு மிச்சிகன் கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. இந்த மாகாண தேர்தல்தான் கடைசி போர்க்களமாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே வரும் ஜூலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் நடைபெறும் மாநாட்டில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இப்போதே ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சன கணைகளைத் தொடுத்து வருகிறார். "பெர்னி சாண்டர்ஸ் பித்துப் பிடித்தவர் போல செயல்படுகிறார். அதிபர் வேட்பாளர் போட்டியில் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்ட நிலையில் செனட்டர் எலிசபெத் வாரன் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்" என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.

"பிடெனோ அல்லது சாண்டர்ஸோ அதிபர் பதவிக்கு பொருத்தமானவர்கள் கிடையாது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஊழல், தவறான கொள்கைகளில் பிடெனுக்கு தொடர்பு உள்ளது. அவர் அதிபர் மாளி கைக்கு தகுதியானவர் கிடையாது. முதியோர் இல்லம்தான் அவருக்கு ஏற்ற இடம். பெர்னி சாண்டர்ஸ் இடதுசாரி கோமாளி. அவரது கொள்கைகள் அமெரிக்காவின் நலனுக்கு பேரழிவை ஏற்படுத்தும்" என்று அதிபர் ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

நவம்பர் மாதம் நெருங்கும் நேரத்தில் அதிபர் ட்ரம்பின் விமர்சனங்கள் மேலும் கடுமையாகும். அவரது விமர்சன கணைகளை ஜனநாயக கட்சி வேட்பாளர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்?

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x