

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பரவிய வூஹான் நகரை சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முதலாகப் பார்வையிட்டார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 3,136 பேர் பலியாகி உள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட வூஹான் நகரைப் பார்வையிட்டார். வூஹானில் கோவிட் - 19 காய்ச்சலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஜி ஜின்பிங் சென்று பார்வையிட்டாதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
மேலும், கோவிட் காய்ச்சலைத் தடுப்பதற்கு ஜி ஜின்பிங் தவறிவிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸ் பரவலைக் கையாண்ட விதம் குறித்து சூ ஜியாங் என்ற சமூக செயல்பாட்டாளர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று கூறி சமூக வலைதளங்களில் அவர் கருத்துகளைப் பதிவிட்டார். இந்நிலையில் சூ ஜியாங் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு அடையாளம் காண முடியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.