

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீன சுகாதார மையம் தரப்பில், “ சீனாவில் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 3, 136 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 80, 750 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17,000க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.
31 மாகாணங்களில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் 19 காய்ச்சலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக கரோனா வைரஸால் அதிகமாக தென் கொரியா பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தென் கரோனா வைரஸுக்கு இதுவரை 7,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.