

கரோனா வைரஸ் பரவலை கையாண்ட விதம் குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று கூறி சமூகவலைத்தளங்களில் எழுதிய சூ ஜியாங் என்ற சமூக செயல்பாட்டாளர் கடந்த பிப்ரவரி 15 முதல் கைது செய்யப்பட்டு அடையாளம் காண முடியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவில் இதுவரை 3,100 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நன்றாகக் குறைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜியோங்கின் சகோதரியிடம் டாங்ஸுவாகூ காவல் நிலைய அதிகாரி கூறும்போது, “ஜியோங் ஒரு இடத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறியதோடு அவரைப் பார்க்க உறவினர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறியதாகவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இது நீதித்துறை சம்பந்தப்படாத கைது நடவடிக்கை, இந்தக் காலக்கட்டங்களில் கைது செய்யப்பட்டோரை வழக்கறிஞர் உட்பட யாரும் சந்திக்க முடியாது. மேலும் ஜியோங்கின் சகோதரியை போலீஸார் மிரட்டுவதாகவும் சீன உரிமைப் போராளி ஹியூ ஜியா தெரிவித்துள்ளார்.
2012-ல் சீன அதிபராக ஜின்பிங் பதவேயேற்றது முதல் சீன மக்களின் பல்வேறு சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஆம்னெஸ்ட் அமைப்பின் ஆய்வாளர் பாட்ரிக் பூன் கூறும்போது, “சீன அரசு அனைத்து சமூக செயல்பாட்டாளர்களின் குரல்களை அடக்கி விட முடியாது. சாதாரண மக்களே சீன அரசு கரோனா வைரஸ் விவகாரத்தைக் கையாண்ட விதத்தை ஆன்லைனில் விமர்சித்து வருகின்றனர். “ என்றார்.
சூ ஜியோங்கின் காதலியும் உரிமைகள் போராளியுமான லி குவோச்சு என்பவரையும் பிப்ரவரி 16ம் தேதி முதல் சீன போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் அரசைக் கவிழ்க்க சதி என்ற புகார் எழுப்பப்பட்டுள்ளது, ஆனால் இது ஒரு இனம்புரியாத குற்றச்சாட்டுதான் என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள்.
கடந்த பிப்.4-ம் தேதி சூ ஜியோங் எழுதிய திறந்த மடலில், “ஒரு திறமையான அரசியல் தலைவர் நெருக்கடி காலக்கட்டங்களில் செயல்படுவதற்கான வாய்ப்பைக் கையில் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை பெரிய நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று அதிபர் ஜின்பிங்கை விமர்சித்ததோடு ஜனவரி மாத தொடக்கத்திலேயே இந்த வைரஸ் பற்றிய உண்மை அதிபருக்குத் தெரிந்திருக்கும், ஆனால் அது பெரிய தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் வரை அவர் காத்திருந்தார் என்றும் ஜின்பிங் மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.
2014ம் ஆண்டு இதே சூ ஜியோங் ‘பொது ஒழுங்கைக் கெடுக்க கூட்டத்தைச் சேர்த்தார்’ என்ற குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.