

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட லொம்பார்டி மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் விதிமுறையை மீறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என இத்தாலி அரசு எச்சரித்துள்ளது.
இத்தாலியில் கரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் இறந்துள்ளனர், இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவுக்கு அடுத்தபடியாகவும், ஐரோப்பாவில் அதிகமான இறப்புகளை இத்தாலி நாடு சந்தித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் இத்தாலி பிரதமர் ஜியுஸ்பி கோன்டே பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கரோனா வைரஸால் மேலும், அதிகமானோர் பாதிக்கப்படக்கூடாது என்பதாகும்.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
இந்த வகையில் லொம்பார்டி மண்டலத்தில் உள்ள 14 மாகணங்களில் உள்ள மக்கள் அவசியம் ஏற்பட்டால் இன்றி அங்கிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகம், நைட் கிளப் ஆகியவற்றை ஏப்ரல் 3-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
லொம்பார்டி மண்டலத்தில் உள்ள 14 மாநிலங்களான மொடினா, பார்மா, பியாசென்ஜா, ரெஜ்ஜியோ எமிலா, ரெமினி, பெசாரா அன்ட் அர்பினோ, அலெஸ்சான்ட்ரியா, அஸ்தி, நவோரா, வெர்பானோ கியூசியோ ஓஸாலா, வெர்சிலி படுவா, ட்ரிவெசியோ அன்ட் வெனிஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக்கு வந்தால், குறைந்த பட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும், கடைகளில் அமர்ந்தாலும் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தால் மட்டும் அங்கிருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த விதிமுறையை மீறினால், 3 மாதம் சிறை தண்டனை அல்லது 250 டாலர் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
2.20 கோடி முகக்கவசம்
குறிப்பாக லொம்பார்டி மண்டலத்தில் உள்ள மிலன் நகரிலிருந்து விமான சேவை நிறுத்தப்படவில்லை. ஆனால், விரைவில் லொம்பார்டி மண்டலத்துக்கு விமானச் சேவை நிறுத்தப்படும் என்று இத்தாலி அரசின் அலிடாலியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
இதற்கிடையே கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இத்தாலி அரசு 2.20 கோடி முகக் கவசத்துக்கு ஆர்டர் செய்துள்ளது எனத் தெரியவந்துள்ளது