

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து இத்தாலியில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்தினர் பாதுகாப்பு கருதியும், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவுக்கு அடுத்தார்போல் அதிகமான இறப்புகளை இத்தாலி சந்தித்துள்ளது. இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர், 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, இத்தாலியின் லம்பார்டி மண்டலம் முழுவதையும் சீல் வைத்துக் கண்காணிப்புக்குள் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வெனிஸ், மிலன் நகரங்களை உள்ளடக்கிய லம்பார்டி பிராந்தியம் முழுவதும் 1.50 கோடி மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறவோ அல்லது வெளியாட்கள் தகுந்த காரணமின்றி உள்ளே செல்லவோ இத்தாலி அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை வரும் ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்
மேலும், நாடுமுழுவதும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்களைத் திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், 1.50 கோடி மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் நுழைந்த கரோனா வைரஸுக்கு அர்ஜென்டினாவில் முதல்நபர் பலியாகியுள்ளார். 90 நாடுகளுக்கும் மேல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லத்தீன் அமெரிக்காவில் முதல் நபர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 21 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 30 நகரங்களில் கரோனா வைரஸ் பரவியதையடுத்து, அங்கு பலி 19 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
இதுதவிர கொலம்பியா, கோஸ்டா ரிகா, மால்டா, மாலத்தீவு, பல்கேரியா, பாராகுவே ஆகிய நாடுகளில் முதன் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
தென் கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு சனிக்கிழமை நிலவரப்படி 7ஆயிரம் பேரைக் கடந்துள்ளது. ஈரான் நாட்டில் இதுவரை 145 பேர் இறந்துள்ளனர், 5, 823 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸால், சர்வதேச அளவிலான வர்த்தகம், சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால், 30 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஸ்காட்லாண்ட் பிரான்ஸ் மகளிர் ரக்பி போட்டி, பார்சிலோனா மாரத்தான் ஓட்டம், சர்வதேச ஐஸ் ஹாக்கி சாம்பியன் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.