Last Updated : 07 Mar, 2020 12:25 PM

 

Published : 07 Mar 2020 12:25 PM
Last Updated : 07 Mar 2020 12:25 PM

கரோனா வைரஸ் அச்சம்: லண்டன், சிங்கப்பூர் ஃபேஸ்புக் அலுவலகம் திடீர் மூடல்

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் ஃபேஸ்புக் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டதால், அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

அந்த அலுவலகம் முழுவதையும் மருத்துவரீதியாக கிருமிநாசினி சுத்தம் செய்யும் பணி நிறைவடைந்ததும் மீண்டும் திறக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாநிலம், வுஹான் நகரை மையமாக வைத்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் சிங்கப்பூர், லண்டனில் செயல்பட்டுவரும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டதாலும், அந்த ஊழியர் லண்டன் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கும் சென்று வந்ததாலும் இரு அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " சிங்கப்பூரில் உள்ள மரினா ஓன் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தில் அந்த ஊழியர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஊழியர் லண்டனில் செயல்படும் எங்கள் அலுவலகத்துக்கும் பிப்ரவரி 24 முதல் 26 வரை சென்றுள்ளார். இதையடுத்து, இரு அலுவலகத்தையும் மருத்துவ ரீதியாக கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் வரும் 13-ம் தேதிவரை இரு அலுவலகங்களும் மூடப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், அந்த பாதிக்கப்பட்ட நபருடன் எந்தெந்த ஊழியர்கள் பேசினார்கள், பழகினார்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்

கரோனா வைரஸ் அச்சத்தால், ஏற்கனவே சீனாவின் ஷாங்காய் அலுவலகம் மூடப்பட்டுவிட்டது, இத்தாலி, தென் கொரியாவில் உள்ள அலுவலகமும் மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x