எல்லை தொடர்ந்து திறந்தே இருக்கும்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரித்த எர்டோகன்

எல்லை தொடர்ந்து திறந்தே இருக்கும்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரித்த எர்டோகன்
Updated on
1 min read

எல்லைகள் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன்.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து சிரியாவுக்கும் துருக்கிக்கும் மோதல் ஏற்பட்டது.

மேலும், சிரிய அகதிகள் ஐரோப்பாவை அடைவதை துருக்கி இனி தடுக்காது என்று அந்நாடு கூறியது. இந்த நிலையில் இது தொடர்பாக துருக்கியின் முடிவை மாற்றுமாறு ஐரோப்பிய யூனியன் விடுத்த கோரிக்கையை துருக்கி அதிபர் எர்டோகன் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவிலிருந்து திரும்பிய எர்டோகன் பேசும்போது, “எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் எல்லைக் கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். அகதிகள் அவர்கள் விரும்பும் பகுதிக்குச் செல்லலாம். அவர்களுக்கு நாம் விளக்கம் கூறத் தேவையில்லை” என்றார்.

சிரியாவின் டெர்ரா நகரின் தெற்குப் பகுதியில், 2011-ம் ஆண்டில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சிறிய அளவிலான போராட்டம் நடந்தது. இதனை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்ததால், உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டன.

அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகளால் போர் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in