

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவ மையம் கூறும்போது, “உலகம் முழுவதும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 90 நாடுகளில் பரவியுள்ள கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை 3,400 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காய்ச்சல் பரவல் குறித்து உலக சுகாதாரம் மையம் கூறும்போது, “ஒவ்வொரு நாடும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 1000 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கரோனா வைரஸுக்கு 124 பேர் பலியாகியுள்ளனர். அடுத்ததாக, இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான கோவிட் காய்ச்சலால் தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.