

மைக்கேல் பிரவுனின் நினைவு தினத்தின்போது வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பெர்குசன் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தில், ஃபெர்குசன் நகரில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் மைக்கல் பிரவுனின் நினைவாக நடத்தப்பட்ட பேரணியின் முடிவில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பேரணியின்போது இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது மற்றொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச்சூடு நீடித்தது.
பல வணிக மையங்கள் உடைக்கப்பட்ட நிலையில் பெர்குசன் நகரில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலைமை சீரடையும் வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் தவிர்க்கவே இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக செயிண்ட் லூயிஸ் பகுதியின் செயலாளர் ஸ்டீவ் செடன்ஜெர் கூறினார்.