

ஆப்கானிஸ்தானில் மூத்த அரசியல்வாதியான அப்துல்லா, காபூலில் கலந்துகொண்ட நிகழ்வில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “தாக்குதல் பெரும் சத்தத்துடன் தொடங்கியது.
அப்துல்லா உட்பட பிற அரசியல்வாதிகள் இத்தாக்குதலில் காயமின்றி தப்பினர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவரான அப்துல் அலி மாசியின் நினைவுக் கூட்டத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை தங்களது அமைப்பு நடத்தவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை .
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை சமீபத்தில் தோஹாவில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும்.
கடந்த 18 ஆண்டுகாலப் போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிதானில் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.