

துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்ய அதிபர் புதினும் இட்லிப்பில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதில், இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்தது. சில நாட்களுக்கு முன்னர் சிரிய ராணுவம் மற்றும் இஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில், துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது.
தொடர்ந்து இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. மேலும், இட்லிப்பில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினை துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.
இது தொடர்பான கூட்டம் மாஸ்கோவில் 6 மணிநேரம் நீடித்தது. இதன் முடிவில் இட்லிப்பில் போர் நிறுத்தத்தை புதினும், எர்டோகனும் அறிவித்தனர்.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். சிரிய அரசுப் படைகள் ஒருவேளை தாக்குதல் நடத்தினால் துருக்கி அமைதியாக இருக்காது. பதில் தாக்குதல் நடத்தும்” என்று தெரிவித்தார்.