

ஈரானில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், “ஈரானில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு புதிதாக 15 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 591 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இதுவரை 3, 513 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் சிறையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சுமார் 54,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.
மேலும், ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.