

சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வியட்நாம் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வியாட்நாம் மொழியில் பாடப்பட்டிருக்கும் இப்பாடல் அனிமெஷன் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'Jealous Coronavirus' என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வீடியோவுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வீடியோவில், கைகளை சோப்பால் கழுவுவது, முகக் கவசங்களைப் பயன்படுத்துவது, கைகளைக் கொண்டு கண், காது, மூக்கு போன்ற பகுதிகளில் தொடக்கூடாது போன்ற விழிப்புணர்வுக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க, வீடுகளைச் சுத்தமாக வைத்தல், உடற்பயிற்சிகளைச் செய்தல், ஒன்றுசேர்ந்து கரோனா வைரஸை அழித்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
3 நிமிடம் ஓடும் அவ்வீடியோ கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்வதில் தொடங்கி அவர்கள் மீண்டும் இணைவதுடன் முடிகிறது. இவ்வீடியோவால் கோவிட்-19 காய்ச்சல் சீனாவில் உருவானது முதல் வெவ்வேறு நாடுகளில் பரவியது வரையிலான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வீடியோவை 7 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இதுவரை யூடியூபில் பார்த்துள்ளனர்.
உலகம் முழுவதும் 90,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணத் தலைநகரான வூஹானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கரோனா வைரஸ், தற்போது சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுதிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.