இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்குப் பதிவு: வன்முறை இன்றி அமைதியாக முடிந்தது

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்குப் பதிவு: வன்முறை இன்றி அமைதியாக முடிந்தது
Updated on
2 min read

இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் சற்று மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, பின்னர் விறுவிறுப்படைந்தது. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித் தனர்.

போலீஸார், துணை ராணுவப் படையினர் உட்பட மொத்தம் 74 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவின்போது பெரிய அளவில் வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை. 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது.

இந்தத் தேர்தலில் சராசரியாக சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் கூறுகின்றன. இதில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக கல்லே, கலுதரா, கம்பஹா, கெகல்லே, அனுராதாபுரா ஆகிய பகுதிகளில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதற்கு முன்பு நடைபெற்ற 7 நாடாளுமன்றத் தேர்தல்களில் சராசரியாக 75 சதவீத வாக்குகள் பதிவாகின. 1989 மற்றும் 2010 தேர்தல்களில் மட்டும் 65 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் 81.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழர் பகுதிகளில் மந்தம்

எனினும், தமிழர்கள் பெரும்பான் மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப் பதிவு சற்று மந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 50 முதல் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

நேற்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங் கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் மற்ற வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இன்று இறுதி முடிவு தெரியும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் தேர்தல் விதி முறைகள் மீறப்பட்டதாக சமூக அமைப்பான தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (சிஎம்இவி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயகே கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர்” என்றார்.

அதிபர் மைத்ரிபால சிறிசேனா வின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் (யுபிஎப்ஏ) பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (யுஎன்பி) இடை யே கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள 29 பேர் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப நியமிக்கப்படுவர். இதில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

தேர்தல் களத்தில் மொத்தம் 6,151 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,653 பேரும் சுயேச்சைகளாக 2,498 பேரும் களத்தில் உள்ளனர்.

ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப் பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் (யுபிஎப்ஏ) பிரதமர் கனவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.

ஆனால் அந்தக் கூட்டணியின் தலைவரும் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித் துள்ளார்.

எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமை யிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கினார் சிறிசேனா. இவருக்கு எதிரிக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித் தனர். இதையடுத்து ராஜபக்சவை வீழ்த்தி சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார்.

ராஜபக்ச நம்பிக்கை

மகிந்த ராஜபக்ச தனது சொந்த தொகுதியான ஹம்பன்டோடாவில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாங்கள் வெற்றி பெறுவோம். எனது தலைமையில் அரசு அமையும் என நம்புகிறேன்” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in