

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் 11 நாட்களாக அந்நாட்டுப் படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை அமெரிக்க ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஆனால், இத்தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வரவில்லை.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன்பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுகால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் மீது இத்தகைய தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது.