

ஏமனில் உள்ள முக்கிய நகரமான அல் ஜாஃப் நகரத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைபற்றியுள்ளனர்.
இதுகுறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், “ஏமன் - சவுதி எல்லையில் அமைந்துள்ள அல் ஜாஃப் நகரத்தை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி ஆதரவு அரசுப் படையிடமிருந்து சண்டையிட்டு கைபற்றியுள்ளது. தற்போது அல் ஜாஃப் பகுதி முழுவதும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது” என்றார்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.