

நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்- காய்தாவுடன் தொடர்புடையது என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
நைஜீரியாவில் பிரிவினையை வலியுறுத்தி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுட்டுள்ள இந்த அமைப்பினர், சமீபத்தில் அங்கு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதுடன், 200 பள்ளி மாணவிகளையும் கடத்தினர். இதையடுத்து அந்த அமைப்புக்கு எதிராக பல்வேறு தடைகளையும் ஐ.நா. விதித்துள்ளது.
இதன் மூலம் அல்-காய்தாவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிதியுதவி மற்றும் ஆயுத தடைகள் போகோ ஹராம் அமைப்புக்கும் பொருந்தும். அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளும் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தினர் என்றே அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐ.நா.வின் இந்த நடவடிக்கைக்கு நைஜீரிய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. போகா ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறியுள்ளார்.
நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மோசமான வன்முறை என்று அவர் கூறியுள்ளார்.