

இந்தியரும் வேத ஜோதிடருமான கதிர் சுப்பையை முன்கூட்டியே கணித்தபடி, அமெரிக்க பங்குச் சந்தைகள் 2,000 புள்ளிகள் வரை கடந்த வாரம் சரிந்தன.
அமெரிக்காவில் வசிக்கும் கதிர் சுப்பையா (KT Astrologer) திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பிட்ஸ் பிலானியில் எம்எஸ் படித்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக வேத ஜோதிடத்தில் (Vedic Astrology) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கேடிஆஸ்ட்ரோ (ktastro.com) என்ற இணையதளத்தையும் இரண்டு யூடியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார். ட்ரம்ப் அதிபராவார் என அவர் அதிபர் ஆவதற்கு ஓராண்டு முன்பே கணித்தவர். இவர் அமெரிக்க பங்குச் சந்தைகள் விரைவில், 2000 புள்ளிகள் வரை சரிவை சந்திக்கும் என்று பிப்ரவரி 7-ம் தேதி பதிவிட்டு இருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக முன்னேறி வருகின்றன. ஜனவரி மாதம் 23-ம் தேதி சனிப்பெயர்ச்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்று வேத ஜோதிடப்படி ஆராய்ந்தேன். பிப்ரவரி 28-ம் தேதி, மார்ச் 9-ம் தேதி அல்லது 17-ம் தேதி அல்லது மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும். ஒரே நாளில் 2000 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடையும் என்று என்னுடைய யூடியூப் சேனலில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிட்டு இருந்தேன். அதன்படி கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்தன.
வேத ஜோதிடம் என்பது ஒரு கலை. பங்குச் சந்தையின் போக்கை முன்கூட்டியே அறிய இதை பயன்படுத்தலாம். இதன் மூலம் லாபம் சம்பாதிக்க நினைத்தால், அந்தக் கலையே மறந்து போய்விடும். அதுபோல், ஒவ்வொரு வாரமும், மாதமும் சந்தையின் போக்கை கணிப்பது கடினம். ஆனால் மிகப்பெரிய சரிவு வரும்போது அதைக் கணிக்க வேத ஜோதிடத்தை பயன்படுத்தலாம். அதே போன்று பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியில் இருந்து எப்போது மீள ஆரம்பிக்கும் என்பதையும் கணிக்க முடியும். ஆனால் 2025-ம் ஆண்டில் பங்குச் சந்தை எந்த குறியீட்டில் இருக்கும் என்றெல்லாம் கணிக்க முடியாது.
இவ்வாறு கதிர் சுப்பையா தெரிவித்தார்.