

அல்குவைதா பயங்கரவாதி பின்லேடனின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுத்து லேடன் கொல்லப்பட்டதற்குக் காரணமான பாகிஸ்தான் மருத்துவர் ஷகீல் அஃப்ரீடி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் தெரிவித்தனர்.
2011-ல் அபோட்டாபாத்தில் பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுத்து அவரை அமெரிக்காக் கொல்வதற்குக் காரமான மருத்துவர் ஷகீல் அப்ரீடி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிறையில் அவரைச் சந்தித்த சகோதரர் ஜமீல் அஃப்ரீடி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “அவருக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்டு வரும் அநீதிகள், மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
2012 மே மாதத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக மருத்துவர் ஷகீல் அப்ரீடிக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இவரது தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஷகீல் அப்ரீடியை விடுவிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்துவேன் என்றார். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அசாத்திய மவுனம் காத்து வருகிறார் ட்ரம்ப். ஆனால் ஷகீலின் விடுதலை குறித்து ட்ரம்ப் முடிவெடுக்க முடியாது பாகிஸ்தான் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.