எப்போது தீரும்? கரோனா  வைரஸ் பலி 3,000-த்தைக் கடந்தது: சீனாவில் மேலும் 42 பேர் பலி- தத்தளிக்கும் ஹூபெய், தென் கொரியா

எப்போது தீரும்? கரோனா  வைரஸ் பலி 3,000-த்தைக் கடந்தது: சீனாவில் மேலும் 42 பேர் பலி- தத்தளிக்கும் ஹூபெய், தென் கொரியா
Updated on
1 min read

எப்போது உலகம் இதிலிருந்து விடுபடும் என்று உலகை உலுக்கி வரும் துயரமான கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,000த்தையும் கடந்து விட்டது. சீனாவின் ஹூபெய்யில் மட்டும் மேலும் 42 பேர் கொடிய வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் கரோனா பலி எண்ணிக்கை 2912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 202 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் சீனாவின் காட்டு விலங்குகள் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கருதப்படும் கரோனா வைரஸ் 60 நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் முதல் கரோனா பலியை அறிவிக்க, இத்தாலி, தென் கொரியா, ஆகிய நாடுகளும் மீள முடியுமா என்ற கேள்வியுடன் கரோனாவுடன் போராடி வருகிறது.

அதாவது 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கரோனா அதிகம் தாக்குகிறது என்பதோடு ஏற்கெனவே பிற நோய்க்கூறுகள் உள்ளவர்களை கரோனா எளிதில் தொற்றுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸினால் இரண்டுக்கும் மேற்பட்ட நோய்க்கூறுகள் தென்படுகின்றன, இதில் பிரதானமானது நிமோனியா என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் இதுவரை 22 பேர் பலியாக புதிதாக 500 பேருக்கு கரோனா தொற்று பீடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000 கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்று தணியும் கரோனா, எப்போது உலகம் கரோனாவிலிருந்து விடுபடும் என்ற கேள்விகளுடன் நாடுகள் பெரிய அளவில் போராடி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in