

உலகின் பல நாடுகளிலும் பரவிவரும் கரோனா வைரஸ் நோய் தற்போது வடக்கு இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு அயர்லாந்து தனது முதல் கரோனா வைரஸ் நோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தில், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2900 பேர் உயிரிழந்துள்ளனர், 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து, நைஜீரியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தென் கொரியாவிலும், ஈரானிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஈரானில் 240 பேர் இதுவரை உயிரிழந்ததாக வந்த செய்தி பொய்யான தகவல் என்று ஈரான் அரசு முழுவதுமாக மறுத்துள்ளது. முன்னதாக ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் காரணமாக 34 பேர் பலியானதாக ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரியாவில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
வடக்கு அயர்லாந்தில் அதாவது பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஏற்கெனவே ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் 23 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சையில் உள்ளனர். ஜெர்மனியில் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இத்தாலியில் கோவிட் 19 காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அங்கு 12 நகரங்கள் மூடப்பட்டன. அங்கிருந்து இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவிய நிலையில் தற்போது அயர்லாந்துக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அயர்லாந்தின் கிழக்கிலிருந்து வந்த அந்த நபர், கோவிட் 19 பரிசோதனை மற்றும் நோயறிதலில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்மூலம் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு பொருத்தமான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நோய் இன்னொருவருக்கு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இத்தாலியில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பயணத்துடன் தொடர்புடையது என்பதால் நோயாளியின் எந்தவொரு தொடர்புகளையும் அடையாளம் காண அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பரவுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அயர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், இப்படி ஏற்பட்டுள்ளது எதிர்பாராததது என்று நாங்கள் நினைக்கவில்லை, அதற்காக நாங்கள் ஜனவரி முதல் நாங்கள் தயார் நிலையில் இருந்து வருகிறோம் என்றார்.