

சிரியா அரசுப்படைகளால் 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலியான நிலையில் மீண்டும் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “சிரியாவில் வடக்கு பகுதியில் மீண்டும் நடந்த புதிய மோதலில் துருக்கி வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து சிரிய அரசு படையின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.
இதில் துருக்கி ராணுவ வீரர்கள் சிரிய அரசுப் படையால் கொல்லப்பட்டதால் சிரியாவுக்கு ஆதரவு தரும் ரஷ்யாவுக்கும் - துருக்கிக்கு இடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.