தலிபான்களுடன் அமெரிக்கா இன்று அமைதி ஒப்பந்தம்: முதல்முறையாக இந்தியா பங்கேற்பு

தலிபான்களுடன் அமெரிக்கா இன்று அமைதி ஒப்பந்தம்: முதல்முறையாக இந்தியா பங்கேற்பு
Updated on
1 min read

அமெரிக்கா, தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக இந்தியா சார்பில் பிரதிநிதி பங்கேற்கிறார்.

அல்-காய்தா தீவிரவாதிகளை அழிக்க கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-காய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இருதரப்புக்கும் பொதுவான கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த வாரம் ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா, தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது ரஷ்யா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் இந்திய சார்பில் கத்தார் தூதர் குமரன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான அமைதி ஒப்பபந்த விவகாரத்தில இந்தியாவுக்கு நேரடியாக பங்களிப்பு ஏதும் இல்லை.

எனினும் ட்ரம்ப் இந்திய வருகைக்கு பிறகு அமெரிக்க – இந்திய உறவு வலுவடைந்துள்ளது. இதனால் தனது நேச நாடான இந்தியாவையும் அமைதி முயற்சியில் பங்கேற்கச் செய்ய அமெரிக்க முன் வந்துள்ளது. ஆனால் இந்தியா பங்கேற்க பாகிஸ்தான் நீண்டநாளாகவே எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in