Published : 29 Feb 2020 07:59 AM
Last Updated : 29 Feb 2020 07:59 AM

அமெரிக்கா, தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா, தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்-காய்தா தீவிரவாதிகளை அழிக்க கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-காய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இருதரப்புக்கும் பொதுவான கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த வாரம் ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா, தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது ரஷ்யா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்தியா சார்பிலும் தூதர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைதி ஒப்பந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x