

சிரியாவில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனும் புதினும் தொலைபேசியில் உரையாடினர்.
இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர். இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.
மேலும், துருக்கி ராணுவ வீரர்கள் சிரிய அரசுப் படையால் கொல்லப்பட்டதால் சிரியாவுக்கு ஆதரவு தரும் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினும், துருக்கி அதிபர் எர்டோகனும் தொலைபேசியில் ஆலோசித்துள்ளனர்.
இதுகுறித்து ரஷ்யா தரப்பில், “துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இட்லிப்பில் நிலவும் பதட்டங்கள் குறித்தும் துருக்கி அதிபர் எர்டோகனிடம் ரஷ்ய அதிபர் புதின் கவலை தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.
விரைவில் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.