டெல்லி வன்முறை; காந்தியின் ஆன்மா முன்னெப்போதையும் விட இன்று அதிகம் தேவை: ஐ.நா. பொதுச் செயலாளர்

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரஸ்
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரஸ்
Updated on
1 min read

டெல்லி ஆர்ப்பாட்டங்களில் வன்முறை ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்தது வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரஸ், முன்னெப்போதையும்விட இன்று அதிகமாக மகாத்மா காந்தியின் ஆன்மா தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தற்போது, கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு டெல்லியில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரஸ் கூறியதாவது:

''டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. மேலும் அதிகபட்சக் கட்டுப்பாடு மற்றும் வன்முறையைத் தவிர்க்க வேண்டும்.

நான் இந்தியாவின் நிலைமையைக் கவனித்து வருகிறேன். வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கேட்டறிகிறேன். கடந்த சில நாட்களாக புதுடெல்லியில் நாங்கள் கேள்விப்பட்ட மரணங்கள் குறித்து வந்த செய்திகளால் மிகவும் வருத்தப்படுகிறோம். மற்ற நாடுகளில் உள்ள அதிகபட்சக் கட்டுப்பாடு கொண்டு வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

நான் என் வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவன். உண்மையான சமூக நல்லிணக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்குவது அவசியம் என்பதால் காந்தியின் ஆன்மா முன்னெப்போதையும் விட இன்று அதிகம் தேவைப்படுகிறது,

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அதைக் கொண்டுவர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ஆன்டனியோ குத்தரஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in