Published : 28 Feb 2020 10:43 AM
Last Updated : 28 Feb 2020 10:43 AM

சிரியா: வான்வழி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி

சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மூத்த துருக்கி அதிகாரிகள் தரப்பில், “சிரியாவில் உள்ள வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 33 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக,சிரியாவின் டெர்ரா நகரின் தெற்குப் பகுதியில், 2011-ம் ஆண்டில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சிறிய அளவிலான போராட்டம் நடந்தது. இதனை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்ததால், உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டன.

அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகளால் போர் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x