

ஈரானில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் 22 ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து, கோவிட் - 19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடாக ஈரான் அறியப்படுகிறது. கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 141 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானில் கரோனா வைரஸ் குறித்த அதீத அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டியுள்ளார். உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81, 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.