Published : 26 Feb 2020 09:44 AM
Last Updated : 26 Feb 2020 09:44 AM

கரோனா வைரஸ் கையில் ஒலிம்பிக் போட்டிகள்: ரத்தாகுமா? ஜப்பான், ஐஓசி பரிசீலனை

கரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 12.6 பில்லியன் டாலர்கள் தொகை செலவிடுகிறது.

ஆனால் தேசிய தணிக்கைத் தகவல்கள் உண்மையான தொகை இதைவிட இரட்டை மடங்கு என்று கூறுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சீனாவில் பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், மே மாதத்திற்குள் கரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகுமா அல்லது நடைபெறுமா என்பதற்கான கால அவகாச சாளரம் 2 அல்லது 3 மாதங்கள். மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சீனாவின் வீரர்கள் எந்த அளவில் தயாராக இருக்கிறார்கள், முதலில் அவர்களால் பங்கேற்க முடியுமா போன்ற கேள்விகள் உள்ளன.

எனவே கரோனா கட்டுப்படுத்தப்படுவதைப் பொறுத்தே ஒலிம்பிக் போட்டிகள் தீர்மானிக்கப்படும், கரோனா கையில் ஒலிம்பிக் போட்டிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x