

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு தென் கொரியாவில் மொத்தம் 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 123 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் 433 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிதாக 123 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தாற்போல் அதிகமான மக்கள் கரோனாவில் தென் கொரியாவில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தென் கொரிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், "டேகு நகரில் உள்ள சின்ஜியோன்ஜி தேவாலயத்தில் சேர்ந்தவர்கள் 75 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி 61 வயது பெண்ணுக்குக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின், அடுத்தடுத்து பரவியுள்ளது. இதுபோல் டேகு நகரில் 4 தேவாலயங்களில் நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
டேகு நகரத்தின் மேயர் விடுத்த அறிவிப்பில், "சின்சியோன்ஜி தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கரோனா மருத்துவப் பரிசோதனை கொள்வது அவசியம். வீட்டுக்குள் மறைந்து கொள்வது நல்லதல்ல. மறைந்துகொண்டால், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். தேவை ஏற்பட்டால் மட்டும் தென் கொரியாவுக்குச் செல்லவும். குறிப்பாக வயதானவர்கள், நீண்டகால நோய் இருக்கும் முதியவர்கள் செல்வதைத் தவிர்க்கவும்" என அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.
மேலும் தென் கொரியாவுக்கு செல்லும் மக்களுக்கு 2-ம் எண் எச்சரிக்கையும் அமெரிக்கா விடுத்துள்ளது.
இதேபோல பிரிட்டனும், தங்கள் நாட்டைச் சேர்ந்த மக்கள் தென் கொரியாவின் டேகு, சியாங்டோ நகருக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பு:
இதற்கு முன்பு 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியான, “அதிவேகமாக பரவும் கோவிட்-19: தென் கொரியாவில் 433 பேர் உயிரிழப்பு” என்ற செய்தி தவறானது. 433 பேர் பாதிப்பு என்பதற்குப் பதிலாக தவறாக உயிரிழப்பு என்று பதிவாகிவிட்டது, இதற்காக வருந்துகிறோம்.
-ஆசிரியர்.